எழுச்சி பார்வை

நீண்ட பதவிக் காலம் மட்டுமே மோடியின் சாதனை ஆகாது!

நீண்ட பதவிக் காலம்  மட்டுமே மோடியின் சாதனை ஆகாது!

பிரதமர் மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் எனப் பெருமிதப்படுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். கூடவே, குஜராத் முதல்வராக அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த காலத்தையும் கணக்கிட்டு, அரசின் நிர்வாக தலைவராக தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 20 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அரசியல் தலைவர் என்றும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், இந்த சாதனையால் குஜராத் மாநிலத்துக்கும் இந்த நாட்டுக்கும் கிடைத்த நன்மை என்ன என்று பார்க்கிறபோது ஏமாற்றமே மிஞ்சுகிறது. அரசியல் அதிகார பதவி வகிப்பதில் வேண்டுமானால், மோடி முந்தைய சாதனைகளை முறியடித்திருக்கலாம். ஆனால் பிரதமராக பதவியேற்ற ஆறே ஆண்டுகளில் இந்தியாவை படு பாதாளத்திற்கு தள்ளிய அவரது சாதனை, இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்த தலைவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது.

1947 தொடங்கி மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற 2014 வரை நாட்டின் மொத்த கடன் சுமை ரூ. 54 லட்சம் கோடி. அதே நேரம் மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014 முதல் நாளது தேதி வரையிலான ஆறே ஆண்டுகளில் ரூ. 47 லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்திருக்கிறது. அதாவது ஏறக்குறைய இந்தியா 67 ஆண்டுகளில் பெற்ற கடனுக்கு ஈடான தொகையை, மோடியின் 6 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பெற்றுள்ளது.

அவரது ஆட்சியின் சாதனை இதோடு நிற்கவில்லை. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் GDP -23.9 சதவிகிதமாக சரிவு.

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், வறுமை 23 சதவிகிதம் அதிகரிப்பு.

நிதி பற்றாக்குறை அதிகரிப்பு. தொழில்துறையின் உற்பத்தி 38.1 சதவிகிதமாக வீழ்ச்சி, கூவி கூவி விற்கப்படும் பொதுத் துறை நிறுவனங்கள்.

மத்தியில் மோடி அரசு பதவியேற்றபின் ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி வரை விதிகளை மீறி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை இல்லாமல் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டு நிதியுதவியும், ஊழலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கடந்த 2016 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 சதவிகிதம் பா.ஜ.க.விற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாத முதல் பிரதமர் மோடி. பாராளுமன்ற விவாதங்களிலோ, அமைச்சரவை ஆட்சி முறையிலோ நம்பிக்கையில்லாதவராக மோடி விளங்கி வருகிறார்.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்த சம்பவம் நடந்தேறியது. முதல்முறையாக பாதுகாப்புத் துறையின் முக்கிய ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து திருடு போன சம்பவம் என மோடியின் துயர சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு தலைவர் எவ்வளவு காலம் பதவியில் இருந்தார் என்பதை வைத்து அவரது சாதனை மதிப்பிடப்படுவதில்லை, மாறாக அவரது பதவி காலத்தில் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் அவர் செய்த நன்மைகள்தான் சாதனையாக மதிப்பிடப்படும்.

இதை பிரதரும் அவரது கட்சியினரும் உணர்ந்து கொண்டால் சரி!

About Author

Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *